11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுகள் பதிவு.. முந்துவது எந்த மாவட்டம்? - விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வாக்குப்பதிவு நேரம் செல்லச் செல்ல வேகம் எடுத்துள்ளது. காலை 9 மணி நிலவரம்: 17.69% பதிவாகியிருந்த நிலையில் காலை 11 மணி நிலவரம்: 37.56% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாகத் தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சராசரியை விடக் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், சென்னையில் பதிவான சில சிறு மோதல்களுக்கு மத்தியிலும் மாநகரப் பகுதிகளில் சுமார் 32% வரை வாக்குப்பதிவு எட்டியுள்ளது.
இன்று காலை 11 மணிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், மற்றும் திரைப்பிரபலங்களான அஜித், தனுஷ், த்ரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி: பெரும்பத்து கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தித் தேர்தலைப் புறக்கணித்துள்ளதால் அங்கு மட்டும் 11 மணி வரை '0' சதவீத வாக்குப்பதிவே நீடிக்கிறது.
மயிலாப்பூர்: வாக்குச்சாவடிக்குள் திமுக - பாஜக இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: திருமங்கலம் பகுதியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தால் ஒரு பெண் காயமடைந்தார்.
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், இன்று மாலைக்குள் வாக்குப்பதிவு சதவீதம் 75-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.