ஆசிய விளையாட்டுப் போட்டி.. தமிழகத்திலிருந்து 36 வீரர்-வீராங்கனைகள் தேர்வு!

 

ஜப்பானில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்தைச் சேர்ந்த 36 பேர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி வரை ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன.

மொத்தம் 36 விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியா சார்பில் களம் காணும் 503 பேர் கொண்ட இந்திய அணிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இதில் 269 வீரர்களும், 234 வீராங்கனைகளும் அடங்குவர். குறிப்பாக, அதிகபட்சமாகத் தடகளப் பிரிவில் மட்டும் 74 வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த மாபெரும் தேசிய அணியில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 22 வீரர்களும், 14 வீராங்கனைகளும் என மொத்தம் 36 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தமிழக விளையாட்டுத்துறைக்கும் இளம் வீரர்களுக்கும் மிகப்பெரிய பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.