Asian Games 2026: MMA-வில் இந்தியாவுக்கு வரலாற்று முதல் பதக்கம் வென்று சாதனை படைத்த சுசிகா தாரியல்!
ஆசிய விளையாட்டு போட்டி 2026-ல் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான Traditional -60 கிலோ எம்.எம்.ஏ. (MMA) பிரிவில் இந்தியாவின் சுசிகா தாரியல் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் MMA முதல்முறையாக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பெண்கள் -60 கிலோ பிரிவில் களம் கண்ட சுசிகா தாரியல், காலிறுதியில் மங்கோலியாவின் Altanchimeg Baigalmaa-வை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதியானது.
அரையிறுதியில் சிங்கப்பூரின் Hui Hoon Teo-வை சுசிகா எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி முடிவில் இருவரும் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க விதிமுறைகள் பயன்படுத்தப்பட்டன.
போட்டிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் காலை எடை பரிசோதனையில் குறைவான எடை கொண்ட வீராங்கனைக்கு முன்னுரிமை வழங்கும் விதியின் அடிப்படையில் சிங்கப்பூர் வீராங்கனை Hui Hoon Teo வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சுசிகா தாரியல் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் MMA பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை 36 வயதான சுசிகா தாரியல் பெற்றுள்ளார். இந்தியாவின் MMA வரலாற்றிலும் இது முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.
சுசிகா தாரியல் ஏற்கனவே ஜூடோ மற்றும் ஜியு-ஜிட்சு உள்ளிட்ட தற்காப்புக் கலை போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2022 காமன்வெல்த் போட்டியிலும் ஜூடோவில் பங்கேற்ற அவர், 2024-ல் ஜியு-ஜிட்சு உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். தற்போது ஆசிய விளையாட்டில் MMA பதக்கத்தையும் கைப்பற்றி தனது சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயத்தை சேர்த்துள்ளார்.அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாதது சுசிகாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், ஆசிய விளையாட்டில் MMAவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றது அவரது விளையாட்டு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.