வயசு 13 தான்... ஆசிய விளையாட்டில் தங்கம்! புதிய சாதனை படைத்த சீன வீராங்கனை!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13 வயது சீன நீச்சல் வீராங்கனை யு ஜிடி தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சீனாவின் யு ஜிடி 2 நிமிடம் 05.08 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் 13 வயதிலேயே ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற யு ஜிடி, தனது முதல் பெரிய தனிநபர் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். அவரது இந்த வெற்றியுடன் புதிய ஆசிய விளையாட்டு சாதனையும் பதிவானது.
இதற்கு முன்பு 2023-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டில் சீனாவின் முன்னணி வீராங்கனையான ஜாங் யுபீ 2 நிமிடம் 05.57 விநாடிகளில் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டியை நிறைவு செய்து சாதனை படைத்திருந்தார். தற்போது யு ஜிடி அந்த சாதனையை சுமார் 0.49 விநாடிகளில் முறியடித்துள்ளார்.யு ஜிடி அடுத்த மாதம் 14 வயதை எட்ட உள்ளார். இளம் வயதிலேயே சர்வதேச நீச்சல் போட்டிகளில் கவனம் பெற்றுள்ள அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 வயதிலேயே சீன அணியின் 4x200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பிறகு பேசிய யு ஜிடி, தனது செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்க முடியும் என்றும், எதிர்காலத்தில் தனது நேரத்தை மேலும் குறைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.2026 ஆசிய விளையாட்டில் யு ஜிடிக்கு இது முதல் தனிநபர் தங்கப் பதக்கமாகும். மேலும், இந்த தொடரில் அவர் பங்கேற்க உள்ள மூன்று தனிநபர் நீச்சல் போட்டிகளில் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டி முதல் போட்டியாக அமைந்துள்ளது.13 வயதிலேயே ஆசிய விளையாட்டு தங்கம் மற்றும் புதிய போட்டி சாதனை என அடுத்தடுத்து சாதித்துள்ள யு ஜிடியின் செயல்பாடு சர்வதேச நீச்சல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.