ஆசிய விளையாட்டுப் போட்டி.. 5 இந்திய டென்னிஸ் வீரர்களை நீக்கியது ஏன்? - விளையாட்டு அமைச்சகம் விளக்கம்!

 

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டென்னிஸ் அணியில் இருந்து முன்னணி வீராங்கனை சஹஜா யமலபள்ளி உட்பட 5 வீரர்கள் நீக்கப்பட்டதற்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் முன்னணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் இதற்கு விரிவான விளக்கம் அளித்துள்ளன.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக AITA பரிந்துரைத்த 12 பேர் கொண்ட பட்டியலில் இருந்து சஹஜா யமலபள்ளி, வைஷ்ணவி அட்கர், வைதேஹி சௌதரி, மானஸ் தம்னே மற்றும் பிரார்த்தனா தோம்பரே ஆகிய 5 வீரர்கள் நீக்கப்பட்டு, 7 பேர் கொண்ட இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் வெற்றி வாய்ப்புகளை முன்கூட்டியே கணிக்காமல், அவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என ரோகன் போபண்ணா மற்றும் AITA வலியுறுத்தியுள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பது வீரர்கள் அனுபவம் பெறுவதற்கான தளம் அல்ல; மாறாக அது பதக்கங்களை மையமாகக் கொண்ட போட்டித் தொடர் என்பதே அரசின் கொள்கை முடிவாகும்.

தனிநபர் ஒற்றையர் பிரிவில் ஆசிய அளவில் முதல் 6 இடங்களுக்குள்ளும், இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களுக்குள்ளும் இருக்கும் வீரர்களே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவர். நீக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் (சஹஜா - 344, வைஷ்ணவி - 390, வைதேஹி - 437) உலகத் தரவரிசையில் 300 இடங்களுக்கு வெளியே உள்ளனர். ஆசியாவின் 16-வது இடத்திலிருக்கும் வீராங்கனை கூட உலகத் தரவரிசையில் 121-வது இடத்தில் உள்ளதால், தற்போதைய நிலையில் இவர்களுக்குப் பதக்க வாய்ப்பு மிகக் குறைவு என அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

டென்னிஸ் விளையாட்டுக்காகத் தேர்வு விதிகளைத் தளர்த்தினால், அது மற்ற 40-க்கும் மேற்பட்ட விளையாட்டுச் சங்கங்களுக்கும் தவறான முன்உதாரணமாகிவிடும் என்பதால் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. வீரர்களை ஒதுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், 2026-27 நிதியாண்டில் டென்னிஸ் பயிற்சி மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்காக ₹10.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனைப் பயன்படுத்தி இளம் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் தரவரிசையை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.