"ஸ்டாலினை திமுக கூட்டணியின் 24 கட்சி பேரைச் சொல்ல சொல்லுங்க.. நான் நிர்வாணமா நடக்குறேன்!" - நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

 

தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரை செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள நாஞ்சில் சம்பத், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி குறித்து பேசியவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மகளிர் தினப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத், தனது வழக்கமான பாணியில் அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். அப்போது திமுக தலைமையிலான கூட்டணியை அவர் கடுமையாகச் சாடினார்.

"திமுக கூட்டணியில் இப்போது எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்றே யாருக்கும் தெரியவில்லை. அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 24 கட்சிகளின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் திக்காமல் திணறாமல் மேடையில் கூறிவிட்டால், நான் நிர்வாணமாக நடக்கத் தயார்!" என அதிரடியாகச் சவால் விடுத்தார். மேலும், திமுகவை அழிக்கவே உதயநிதி ஸ்டாலின் பிறந்திருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

"75 ஆண்டு கால வரலாறு கொண்டதாகக் கூறும் திமுக, இப்போது தவெக-வின் பாணியைக் காப்பி அடிக்கிறது. விஜய் துண்டு போடுவதைப் பார்த்துவிட்டு, இப்போது ஸ்டாலினும் துண்டு போட்டுக்கொண்டு சுற்றலாமா என்று யோசிக்கிறார். விக்கிரவாண்டியில் 'ரேம்ப் வாக்'கை அறிமுகப்படுத்தியதே விஜய் தான்" என்று பேசினார்.

"தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்தக் குழுவையும் அமைக்கவில்லை. நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவும் இல்லை. நாங்கள் படைக்கு முந்துபவர்களே தவிர, பந்திக்கு முந்துபவர்கள் அல்ல" எனத் தெளிவுபடுத்தினார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்? திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே 'கள்ள உறவு' இருப்பதை இது காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் இன்னும் அடிமைகளாகவே கருதப்படுகிறார்கள். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள சூழலில், பெண்களின் நிலையை உணர்ந்து விஜய் வாக்குறுதிகளை அறிவிப்பார் என்று கூறினார்.