ஜூன் 23 வரை 3 நாட்களுக்குச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் - சபாநாயகர் அறிவிப்பு!

 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வுக்குப் பிறகு, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர், நடப்புக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அதிகாரப்பூர்வ கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, இந்த புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

சபாநாயகர் அறிவிப்பின்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20, 21) ஆகிய இரு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, கூட்டத்தொடரின் செயல்பாடுகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன.

நாளை அண்மையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் முக்கியத் திரைப்பிரபலங்களுக்கு அவையில் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும். அதன் பின்னர் அவை ஒத்திவைக்கப்படும்.

ஜூன் 22 (திங்கள்கிழமை)  இன்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை மீதான விவாதங்கள் மற்றும் சட்டமன்றத்தின் இதர முக்கிய அலுவல் பணிகள் தொடங்கும்.

ஜூன் 23 (செவ்வாய்க்கிழமை) கூட்டத்தொடரின் இறுதி நாளான அன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் கொண்டு வரப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் நடைபெறும். இறுதியாக, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விரிவான பதிலுரையை வழங்குவார்.

முன்னதாகப் பேரவை வளாகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், 3 நாட்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கிடைக்கப் பெற்றுள்ள குறுகிய காலத்திற்குள் ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பேரவைக்குள் அனல் பறக்கும் விவாதங்களும், அரசியல் மோதல்களும் உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.