ஜூன் 18 முதல் சட்டசபை கூடுகிறது... ஆளுநர் உரையுடன் புதிய தொடக்கம்!

 

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளது. இந்த புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டுள்ளார்.

கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக ஆளுநர் அர்லேகர் முறைப்படி உரையாற்ற உள்ளார். ஆங்கிலத்தில் அமையவிருக்கும் அவரது உரையில் புதிய அரசின் கொள்கைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து, ஆளுநரின் அந்த உரையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார். அடுத்த இரண்டு நாட்கள் இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெறும்.

இந்த முதல் கூட்டத்தொடரிலேயே 2026-2027-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.