தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண்ணுக்கு நிர்வாண பூஜை நடத்தி, மிரட்டி பணம் பறித்த ஜோதிடர் கைது!
சென்னையில் பாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த கனடா நாட்டுப் பெண்ணிடம் கிளி ஜோதிடம் மூலம் நைசாகப் பழகி, நிர்வாணப் பூஜை செய்து மிரட்டிய தென்காசியைச் சேர்ந்த ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 37 வயதுடைய கனடா நாட்டுக்குடியுரிமை பெற்ற பெண் ஒருவர், சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்துள்ளார். அப்போது பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்ற போது அவருக்குக் கிளி ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக ஜோதிடரிடம் குறி கேட்டுள்ளார்.
ஜோதிடர் கடந்த காலத்தை துல்லியமாகக் கூறியதால் அவரை நம்பிய பெண்ணிடம், தோஷம் கழிக்க நிர்வாணப் பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாகப் பூஜை செய்ய வைத்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் நிர்வாணக் காட்சிகளைத் தனது செல்போனில் பதிவு செய்துள்ளதுடன், பரிகாரக் கட்டணமாக ரூ.70 ஆயிரமும் பெற்றுள்ளார்.
பின்னர் அந்தப் பெண் மீண்டும் சென்னைக்கு வந்த போது, ஜோதிடர் கூடுதலாக மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்தால் நிர்வாணப் புகைப்படங்களையும், வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தியாகராயநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தென்காசிக்கு விரைந்து சென்று கிளி ஜோதிடரான இசக்கிமுத்துவை (48) கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 17 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.