2029-ல் விஜய் பிரதமர் ஆவார் - ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணிப்பு!

 

தமிழக முதலமைச்சர் விஜய் வரும் 2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென்மாநிலங்களில் பெரும் வெற்றியைப் பெற்று நாட்டின் பிரதமராவார் என்று அவரது ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணித்துள்ளதாக 'வெற்றி தொலைக்காட்சி' சேனலின் நிர்வாக இயக்குநர் சிங்காரவடிவேலன் தெரிவித்துள்ளார்.

2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய அண்டை மாநிலங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அமைப்புகளை விரிவுபடுத்திப் போட்டியிடும். இதன்மூலம் தென்மாநிலங்களில் மட்டும் 60 மக்களவைத் தொகுதிகளை தவெக கைப்பற்றும் எனக் கணித்துள்ளார்.

தெலங்கானாவில் கவிதா, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அடங்கிய மாநிலக் கட்சிகளின் கூட்டணி அமையும். இக்கூட்டணி மூலம் சுமார் 130 எம்.பி.க்கள் பலம் கிடைக்கும் என்றும், இந்த கூட்டணிக்குத் தலைவராக விஜய் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் அமையவிருக்கும் இந்த தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்குக் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து அல்லது இணைந்து ஆதரவு அளிக்கும் என்றும், இதன் மூலம் விஜய் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும் அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் அறியப்படும் ரிக்கி ரத்தன் பண்டிட்டின் இந்த எதிர்பாராத தேர்தல் கணக்குகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.