10 லட்சம் பேர் பாதிப்பு - வங்காளதேசத்தில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலி!
அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இமாலய வெள்ளப்பெருக்கும், கொடூர நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி ரோகிங்கியா அகதிகள் உட்பட இதுவரை 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வங்காளதேசத்தின் தென்கிழக்கு பகுதியான சிட்டகாங்க் மாகாணத்தின் கீழ் உள்ள காக்ஸ் பஜார், பந்தர்பன் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் இந்தத் தொடர் மழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாகாணத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் ஆபத்தான அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் குடியிருப்புகளைச் சூழ்ந்த நீரால் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை இழந்து, பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். பல இடங்களில் சாலைகள் மற்றும் இரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், காக்ஸ் பஜார் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அகதிகள் முகாம்களில் ஒன்றான காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோகிங்கியா முஸ்லிம்களின் தற்காலிக முகாம்கள் இந்த நிலச்சரிவுகளால் அதிகம் சேதமடைந்துள்ளன. மண்ணால் ஆன மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தற்காலிகக் குடியிருப்புகள் நிலச்சரிவில் சரிந்து விழுந்தன. இந்தத் துயரச் சம்பவத்தில் மண்ணில் புதையுண்டு பலியான 51 பேரில், 13-க்கும் மேற்பட்டோர் ரோகிங்கியா அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாகக் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் உணவுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரும் மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது. சிட்டகாங்க் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளை முடுக்கிவிடுவதற்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் வங்காளதேச இராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு சிட்டகாங்க், டாக்கா மற்றும் கடலோர மாவட்டங்களில் மேலும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான ஆபத்து இன்னும் நீடிப்பதாகவும் வங்காளதேச வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சத்தில் மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.