அரசு பேருந்தில் காட்டு தேனீக்கள் கொட்டியதில் 17 பேர் படுகாயம்.. கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து மீது காட்டு தேனீக்கள் திடீரெனப் பாய்ந்து தாக்கியதில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.
பத்தனம்திட்டாவில் இருந்து சுற்றுலா மையமான கவி பகுதிக்குத் தினமும் கேரள அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் புறப்பட்ட அந்தப் பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் உள்பட மொத்தம் 58 பேர் பயணித்துள்ளனர்.
பேருந்து வண்டிப்பெரியார் வள்ள கடவுக்கு அருகே கோழிக்கானத்தில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயம் அருகில் வந்தபோது, எதிரே வந்த காருக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை இடது பக்கமாக ஒதுக்கியுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த மரக்கிளையில் பேருந்து லேசாக உரசியது.
மரக்கிளையில் உரசியதால் அங்கிருந்த காட்டுத் தேனீக் கூட்டம் திடீரெனக் கலைந்து பேருந்துக்குள் புகுந்து பயணிகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. இதைச் சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஜன்னல்களை மூடியதுடன், கதவைத் திறந்துகொண்டு சாலையில் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
தேனீக்கள் விடாமல் துரத்தித் தாக்கியதில் ஐயப்ப பக்தர்கள், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதுடன், வனத்துறை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.