மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் நாட்டுவெடி வெடித்து குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேர் படுகாயம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, எதிர்பாராதவிதமாகப் பட்டாசுகள் மற்றும் நாட்டுவெடிகள் மொத்தமாக வெடித்துச் சிதறிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பக்தர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை குச்சிபாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வருடாந்திர ஆனி பெருவிழா கடந்த சில நாட்களாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான 'தீமிதி திருவிழா' நேற்று மாலை மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு நேரத்தில் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன. இதற்காகக் கோவில் வளாகத்தின் அருகிலேயே தனியாகப் பெரிய அளவில் வானவெடிகள், பட்டாசுகள் மற்றும் நாட்டுவெடிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
சுவாமிக்குத் தீபாராதனை காட்டிப் படைக்கும் போது, எதிர்பாராதவிதமாகப் பட்டாசுகளிலிருந்து கிளம்பிய தணல் அல்லது தீப்பொறி ஒன்று அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த நாட்டுவெடிகள் மீது பட்டுள்ளது.
தீப்பொறி பட்ட அடுத்த சில நொடிகளில், அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிகளும் பயங்கர சத்தத்துடன் மொத்தமாக ஒரே நேரத்தில் நாலாபுறமும் வெடித்துச் சிதறின. இதனால் திருவிழா மைதானமே புகைமண்டலமாக மாறியதுடன், அங்கிருந்த பக்தர்கள் தங்களது உயிரைக் காக்க நாலாபுறமும் அலறியடித்தபடி சிதறி ஓடினர். இருப்பினும், இந்த எதிர்பாராத வெடி விபத்தில் சிக்கித் திருவிழாவிற்கு வந்திருந்த 20 பக்தர்கள் உடல் கருகிப் பலத்த காயமடைந்தனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து கிள்ளை மற்றும் சிதம்பரம் பகுதி போலீசார் தீயணைப்புத் துறையினருடன் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 20 பேரையும் மீட்ட போலீசார், அவர்களை உடனடியாகச் சிகிச்சைக்காகச் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கூடும் கோவில் திருவிழாக்களில் வெடிபொருட்களைப் பாதுகாப்பற்ற முறையில் கையாண்டது யார், உரிய அனுமதியுடன் தான் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்துக் கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கிள்ளை குச்சிபாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.