சீனாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு - 21 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல நூறு கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
சீனாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான மழைக் கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஹுபெய், ஹுனான் மற்றும் குயிஜவ் உள்ளிட்ட மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், வர்த்தகக் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தின் வீரியம் காரணமாகப் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதிப் பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து மற்றும் மின் விநியோகச் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி வெவ்வேறு மாகாணங்களில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கே உள்ள குவாங்சி பகுதியில், பண்ணைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாகக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இந்த அதிர்ச்சிச் சம்பவத்தில் லாரியில் இருந்த 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி தென்மேற்கு குயிஜவ் மாகாணத்தில் 4 பேரும், தெற்கு ஹுனான் மாகாணத்தில் 4 பேரும், மத்திய ஹுபெய் மாகாணத்தின் தாழ்வான கிராமப் பகுதிகளில் 3 பேரும் பலியாகியுள்ளனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சீனாவில் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் கூடுதலான பரப்பளவு கொண்ட பகுதிகள் இந்த வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும் சீனா அரசு முதற்கட்டமாக 2.2 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.180 கோடிக்கும் அதிம்) அவசரப் பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.