ஆப்பிரிக்காவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பள்ளிக்குழந்தைகள் உட்பட 25 பேர் பலி!
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடான கேப் வெர்டேயில், மலைப்பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேப் வெர்டே நாட்டின் பகொ தீவில் உள்ள ஷடஸ் கல்டிரஸ் பகுதியில், ஆம்னி பஸ் ஒன்றில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் என மொத்தம் 32 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.
மலைப்பாங்கான வழியில் பஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓடி அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இந்த விபத்து குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.