உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 30 பேர் படுகாயம்!

 

சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து மதுரை நோக்கிப் பயணிகளை ஏற்றிக்கொண்டு விரைந்த தனியார் ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக் குழுவினரும் காவல்துறையினரும் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் கிரேன் உதவியுடன் பேருந்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுப் போக்குவரத்தைச் சீரமைத்தனர்.