மாலியில் பயங்கரவாதிகளுடான மோதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய வடக்கு நகரத்தை மீட்கும் ராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட பயங்கர மோதலில் 30 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலி நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார். மாலி ராணுவ அரசாங்கத்திற்கு ரஷ்யா தனது முழுமையான ராணுவ ஆதரவை வழங்கி வருகிறது.

மாலி நாட்டில் ஐ.எஸ். அல்கொய்தா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளும், சில உள்நாட்டு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, வடக்கு மாலியைத் தங்களுக்குத் தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கிளர்ச்சியாளர்களும் பயங்கரவாதிகளும் அரசுக்கு எதிராகத் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பமாகோ உட்படப் பல்வேறு முக்கிய நகரங்களைக் குறிவைத்து அல்கொய்தா பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த சூலை 4-ஆம் தேதி முதல் அக்லிஹல், அனிபிஸ், கொவா, ஹனிரொபா உள்ளிட்ட வடக்கு நகரங்கள் மீது பயங்கரவாதிகள் தங்களது கொடூரத் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.

பயங்கரவாதிகளின் இந்தத் தொடர் அராஜகங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாதிகள் வசம் உள்ள நகரங்களை மீட்கும் அதிரடி நடவடிக்கையில் மாலி நாட்டு ராணுவம் இறங்கியுள்ளது. மாலியின் முக்கிய வடக்கு நகரமான 'அனிபிஸ்' பகுதியைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்த பயங்கரவாதிகளை விரட்டியடிக்க ராணுவம் தீவிர வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியது. பல மணி நேரக் கடுமையான போருக்குப் பின் அனிபிஸ் நகரத்தை ராணுவம் முழுமையாக மீட்டுத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் மாலி நாட்டு ராணுவ வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கொடூர மோதலில் மேலும் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்கள் தரப்பில் பெரிய இழப்பு ஏற்பட்ட போதிலும், அனிபிஸ் நகரை மீட்டுள்ள ராணுவம், எஞ்சிய வடக்கு நகரங்களிலும் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிப்பதற்கான தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.