ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் ஊடுருவல் - நெரிசலில் சிக்கி 34 பேர் பலி!

 

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயரும் அகதிகள், மொராக்கோ எல்லையை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் ஊடுருவியதால் பெரும் பரபரப்பும் அசாதாரண சூழலும் நிலவுகிறது.

மொராக்கோவின் மத்திய தரைக்கடல் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் எல்லைப் பகுதியான சியூட்டாவிற்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் ஒரே நேரத்தில் நுழைய முயன்றனர்.

அகதிகள் எல்லை வேலி, கதவுகள் மற்றும் சிலர் கடல் வழியே நீந்தியும், மிதக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தியும் சியூட்டாவிற்குள் புகுந்தனர். எல்லைப் பகுதியில் கட்டுக்கடங்காமல் கூடிய அகதிகளைப் போலிஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/Tgd8H9mSvFo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Tgd8H9mSvFo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் நுழைந்ததால் அப்பகுதியில் கடும் குழப்பம் ஏற்பட்டது. நிலைமை கைமீறிச் சென்றதை அடுத்து, சியூட்டா உள்ளூர் நிர்வாகம் ஸ்பெயின் அரசிடம் ராணுவ உதவியைக் கோரியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அமைதியை நிலைநாட்டவும் சியூட்டாவில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஸ்பெயின் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா ஆகியோர் சியூட்டாவிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து நிலப்பரப்பு வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதற்கு, மொராக்கோ எல்லைக்கு அருகில் உள்ள ஸ்பெயினின் இந்த சியூட்டா பகுதி நீண்ட காலமாகப் புலம்பெயர்வோரின் முக்கிய நுழைவு வாயிலாகவும் மையப்புள்ளியாகவும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.