அமர்நாத் பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 36 பேர் காயம்!
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் பனி லிங்கத் தரிசன முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த சுற்றுலாப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 36 பக்தர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் காந்தர்பால் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, பக்தர்கள் பயணித்த சுற்றுலாப் பேருந்து எதிர்பாராதவிதமாகச் சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
கடல் மட்டத்தில் இருந்து 12,730 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் தரிசனத்தை நிறைவு செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது இத்த துயரச் சம்பவம் நேரிட்டுள்ளது. விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலக் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிய 36 பக்தர்களையும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த பக்தர்கள் அனைவரும் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்துத் தகவலறிந்த ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பாதிக்கப்பட்ட பக்தர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், உயர்தர மருத்துவச் சிகிச்சையையும் தாமதமின்றி வழங்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.