உ.பி.யில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி 81 பேர் பலியான துயரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் பெய்துவரும் அதீத மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 81 பேர் பலியாகியுள்ளனர்; 46 பேர் காயமடைந்துள்ளனர்.
மாநிலத்தின் 75 மாவட்டங்களில் 56 மாவட்டங்கள் வழக்கத்தை விட மிக அதிக அளவிலான மழையைப் பதிவு செய்துள்ளன. கடந்த 48 மணிநேரத்தில் சராசரியாக 66.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரால் மாநிலம் முழுவதும் 1,021 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 107 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக மாநில நிவாரண ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சீதாபூர் மாவட்டத்தில் 7 பேரும், லக்கிம்பூர் கேரி, பஹ்ரைச் மற்றும் பலராம்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழையால் சேதமடைந்த பயிர்களின் கணக்கெடுக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.