பாதாள அறையிலிருந்து வெளியே வருகிறார் அத்திவரதர்... கும்பகோணத்தில் வைபவம்!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவம் போன்று, கும்பகோணத்திலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அபூர்வ அத்திவரதர் தரிசனம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் இந்த அபூர்வ நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்தத் திருக்கோயிலின் மூலவர் சந்நிதிக்குக் கிழக்கே உள்ள ஒரு ரகசியப் பாதாள அறையில், அத்தி மரத்தால் ஆன சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி, இந்தச் சிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பாதாள அறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
மார்ச் 1-ம் தேதி பாதாள அறையிலிருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்படுகிறார். அன்று முதல் மார்ச் 10-ம் தேதி வரை (10 நாட்கள் மட்டும்) பக்தர்கள் தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
இந்த 10 நாட்களில் தைலக்காப்பு, புஷ்ப சேவை மற்றும் ஊஞ்சல் சேவைகளைப் பக்தர்களே நேரடியாகச் செய்ய இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
1915-ம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால் சுமார் 98 ஆண்டுகள் இந்த அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்படாமல் இருந்தது. பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்டுப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தற்போது மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 1-ம் தேதி அத்திவரதர் பக்தர்களுக்கு ஆசி வழங்கக் காட்சியளிக்க உள்ளார்.