பயிற்சிக்குச் சென்ற தடகள வீராங்கனை ரயில் மோதி பலி... 16 வயது மகளைப் பறிகொடுத்து கதறிய தந்தை!

 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 16 வயது தடகள வீராங்கனை மீது விரைவு ரயில் மோதியதில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டப் பயிற்சிக்காகச் சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த செங்குன்றம் பாரதி நகரைச் சேர்ந்தவர் கே. யுவஸ்ரீ (வயது 16). தடகள வீராங்கனையான இவர், வழக்கம் போல சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்திற்கு ஓட்டப் பயிற்சிக்காகச் சென்றுள்ளார்.

பயிற்சி மைதானத்திற்குச் செல்வதற்காக யுவஸ்ரீ ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, தாம்பரம் மார்க்கத்திலிருந்து அதிவேகமாக வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட யுவஸ்ரீ தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், படுகாயமடைந்த யுவஸ்ரீயை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி யுவஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து நடந்த சூழல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பிக்கையுடன் வளர்ந்து வந்த இளம் தடகள வீராங்கனை ரயில் விபத்தில் உயிரிழந்தது செங்குன்றம் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.