மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டித் தொடக்கம் - 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு!

 

வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரையில் சர்வதேச அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் கோலாகலமாகத் தொடங்கியது.

உலக அலைச்சறுக்கு லீக் அமைப்பின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தாய்லாந்து, ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இத்தொடரில் சிறப்பிடம் பெறும் வெற்றி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிரப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இப்போட்டியில் வீரர்கள் ஈட்டும் தரவரிசைப் புள்ளிகள் (Ranking Points) அவர்களுக்கு சர்வதேச அளவில் பெரும் வாய்ப்புகளை வழங்கும். இப்புள்ளிகள் மூலம் உலகளாவிய 'சேலஞ்சர் சீரிஸ்' போன்ற உயர்மட்டத் தொடர்களில் பங்கேற்கத் தகுதி பெறலாம். இதன் தொடர்ச்சியாக 2028-இல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுகளுக்கு முன்னேறவும் இந்த சர்வதேசத் தொடர் மிக முக்கியப் பங்களிக்கும்.