காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி... கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துப் பணம் கொள்ளை!

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தைக் கேஸ் வெல்டிங் மூலம் உடைத்துப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் - சோமங்கலம் சாலையில் உள்ள புதுப்பேர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில், நள்ளிரவில் நுழைந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கைவரிசை காட்டியுள்ளனர்.

கொள்ளை சம்பவத்தின் போது அடையாளம் தெரியாமல் இருக்க ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மீது ஸ்பிரே பெயிண்ட் அடித்துள்ளனர். மேலும், அவசர எச்சரிக்கை ஒலி எழுப்பும் அலாரம் சிஸ்டத்தின் இணைப்பையும் துண்டித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து வங்கி நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எவ்வளவு ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுக்குப் பின்னரே முழுமையாகத் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.