வளிமண்டல சுழற்சி.. சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!

 

வட கடலோரத் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தலைநகர் சென்னையில் பரவலாகக் கனமழை பெய்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் நேரங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வடபழனி உட்படப் பல்வேறு முக்கியப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த அக்னி வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணமான வானிலை தணிந்து, தற்போது நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் சென்னை வாசிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.