ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல் - ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!
கச்சா எண்ணெய் விநியோகத்தின் மிக முக்கியப் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நேற்று அதிகாலை வணிகக் கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரெனத் தாக்குதலுக்குள்ளானது. ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள இச்செய்தியைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் கப்பலில் பணியில் இருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்துவதில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் நடந்துள்ள இத்தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எரிபொருள் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.