சவூதி எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதல்... இந்தியா கடும் கண்டனம்!
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் கிடங்குகள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு இந்திய அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
சவூதியின் இறையாண்மைக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக குடிமக்கள் மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
பாப்-எல்-மந்தேப் கடல் பகுதியில் சர்வதேச கடல் வழிப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், பிராந்தியத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் விதமாகவும் அமைந்துள்ள இத்தகைய ஆக்கிரமிப்புச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் தொடரும் இத்தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.