கப்பல்கள் மீது தாக்குதல்... அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு இந்தியா மீண்டும் சம்மன் அனுப்பி கடும் கண்டனம்!

 

ஓமன் கடற்பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்குத் தனது மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி ஜேசன் மீக்ஸை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று இரண்டாவது முறையாக நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.

சர்வதேசக் கடல் வழித்தடத்தில், அதிலும் குறிப்பாக ஓமன் வளைகுடாப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற 'எம்.டி. செட்டபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட கொடூர ஏவுகணைத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய அரசு இவ்விவகாரத்தைத் சர்வதேச அளவில் மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, புது டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அமெரிக்கப் பிரிவு கூடுதல் செயலாளர், அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜேசன் மீக்ஸை சவுத் பிளாக்கில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துச் சம்மன் வழங்கினார். அப்போது, வளைகுடாப் பிராந்தியத்தில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் இந்தியர்களின் உயிர் இழப்பிற்கு வழிவகுத்த பாதுகாப்புச் சீர்குலைவுகள் குறித்து இந்தியாவின் ஆழமான கவலைகளும், கடுமையான கண்டனங்களும் அமெரிக்கத் தரப்பிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டன.

ஏற்கெனவே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது முதல் கட்ட கண்டனத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், மிகக் குறுகிய கால இடைவெளியில் இன்று இரண்டாவது முறையாக அவரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளது, இந்த விவகாரத்தில் இந்திய அரசு கொண்டுள்ள தீவிரத்தன்மையைக் காட்டுகிறது.

வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இயங்கும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை நிலைநாட்டவும், உலகளாவிய எனர்ஜி காரிடார் வழித்தடங்களில் அதிகரித்து வரும் இத்தகைய ஆயுதமேந்திய அச்சுறுத்தல்களை ஒடுக்கவும் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கடல்சார் நிர்வாகங்கள் கூடுதல் பொறுப்புடன், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்தியா இந்தச் சந்திப்பின் மூலம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.