ரோந்துப் பணி காவலரைத் தாக்கி, கையை உடைத்த தவெக நிர்வாகிகள்... கும்பகோணத்தில் அதிர்ச்சி!

 

கும்பகோணம் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பேனர்களை அகற்றச் சொன்ன காவலர் ஒருவரைக் கும்பல் ஒன்று தாக்கியதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இக்குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரைப் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்துள்ளனர்.

கும்பகோணம் நால் ரோடு சந்திப்புப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, பொதுமக்களும் வாகனங்களும் செல்ல முடியாதபடி சாலையின் குறுக்கே தவெகவினர் சிலர் விளம்பரப் பலகைகளை வைத்துள்ளனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை காவலர் தேவேந்திரன் என்பவர், போக்குவரத்துப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அங்கிருந்தவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தவெக வார்டு நிர்வாகிகள் என அறியப்படும் அருண் (21) மற்றும் காளி (30) ஆகிய இருவரும் காவலர் தேவேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைப் பலமாகத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் காவலர் தேவேந்திரனின் வலது கை மணிக்கட்டுப் பகுதியில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.

தாக்குதலைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலையப் போலீசார், காயமடைந்த காவலர் தேவேந்திரனை மீட்டு உடனடியாகக் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகக் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் கொலை முயற்சி, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்.

தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தீவிரத் தேடுதலுக்குப் பின் குற்றவாளி காளியைப் போலீசார் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான அருண், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகிச் சரணடைந்தார்.

இதையடுத்து, இருவரையும் முறையாகக் கைது செய்த போலீஸார், அவர்களைக் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். கடமைக்காகப் பணியாற்றிய காவலர் மீதே ஆளுங்கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் காவல்துறை வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.