“பெண்கள் மீதான தாக்குதல்.. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!” - விஜய் ஆவேசம்! 

 

பொள்ளாச்சி அருகே வீட்டின் சுவரில் அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை ஒட்டியதைத் தட்டிக்கேட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே ஒரு வீட்டின் சுவரில், அந்த வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி சில நபர்கள் தங்களது கட்சியின் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இதனை அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கையில் கைக்குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அந்த கும்பல் உடல்ரீதியாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய் அதில், "அனுமதியின்றி ஒருவரது தனிப்பட்ட சொத்தில் கட்சி விளம்பரங்களை ஒட்டுவதே சட்டத்திற்குப் புறம்பானது. அதைத் தட்டிக்கேட்ட பெண்ணையும், அவரது குடும்பத்தையும் தாக்குவது காட்டுமிராண்டித்தனமானது. கைக்குழந்தையுடன் இருந்த ஒரு பெண்ணிடம் இத்தகைய அநாகரிகமான முறையில் நடந்துகொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது."

"விதியை மீறிச் செயல்பட்டதோடு, வன்முறையில் ஈடுபட்ட அந்த நபர்களைத் தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து விஜய் விடுத்துள்ள இந்த அறிக்கை, அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துத் தவெக தலைவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.