சேலத்தில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி.. காவலாளிகள் மீது மர்ம கும்பல் கொடூரத் தாக்குதல்!

 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த காவலாளியைக் கல்லால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அருகிலுள்ள செல்போன் கடையிலும் கொள்ளையடிக்க முயன்று அங்கிருந்த காவலாளியையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கு நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல், வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற இரவு நேரக் காவலாளியை அந்த மர்ம கும்பல் கற்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளது.

வங்கியைத் தொடர்ந்து, அதன் அருகிலுள்ள செல்போன் கடையிலும் கொள்ளையடிக்கும் நோக்கில் அந்தக் கும்பல் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கிருந்த காவலாளி தடுக்க முயன்றபோது, அவரையும் அந்த மர்ம நபர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

மர்ம கும்பலின் தாக்குதலில் காயமடைந்த இரண்டு காவலாளிகளும் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஆத்தூர் காவல்துறையினர், கூட்டுறவு வங்கி மற்றும் செல்போன் கடையில் தடயங்களைச் சேகரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, நள்ளிரவில் கைவரிசை காட்ட முயன்ற மர்ம கும்பலைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.