9 மாத குழந்தையின் வாயில் ‘பெவிகுயிக்’ ஊற்றிய அத்தை - புனேவில் கொடூரம்!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது சகோதரரின் 9 மாதப் பெண் குழந்தையின் வாயில் ‘பெவிகுக்’ ஊற்றிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே லோஹேகான் பகுதியைச் சேர்ந்த அல்தாஃப் நபி ஷேக் என்பவரின் மனைவி ஜைனப் மற்றும் அல்தாஃபின் சகோதரி சானியா ஷேக் ஆகிய இருவருக்கும் இடையே இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்த ஆத்திரத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாதக் குழந்தையின் வாயில் சானியா ஷேக் ‘பெவிகுக்’ பசையை ஊற்றியுள்ளார்.
பசை ஊற்றப்பட்டதால் குழந்தையின் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டன. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தை மெல்ல உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அத்தை சானியா ஷேக் உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.