அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் திடீர் அறிவிப்பு!

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரும் அதிரடி ஆட்டக்காரருமான கிளென் மேக்ஸ்வெல், அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல், தனது 14 ஆண்டுகாலப் பயணத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட், 149 ஒருநாள் மற்றும் 130 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 149 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள், 23 அரைசதங்கள் உட்பட 3,990 ரன்களையும் 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 2023 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டைச் சதமும் (201*) அடங்கும்.

130 டி20 போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களுடன் 2,897 ரன்களும், பந்துவீச்சில் 51 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர்களிலும், 2021 டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் அணியின் மிக முக்கிய வெற்றித்தூணாகச் செயல்பட்டுள்ளார். சர்வதேசப் போட்டிகளுடன் சேர்த்து, தனது சொந்த விக்டோரியா மாநில அணிக்கான உள்ளூர் முதல்தர மற்றும் 50-ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் மற்றும் பிக் பாஷ் லீக் போன்ற உலகளாவிய டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தி பிக் ஷோ" என்று அன்போடு அழைக்கப்படும் கிளென் மேக்ஸ்வெல்லின் இந்தத் திடீர் ஓய்வு முடிவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.