எல்.பி.ஜி காஸ் கடும் தட்டுப்பாடு - 6 மணி நேரம் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் - சென்னையில் வாழ்வாதாரம் பாதிப்பு!
சென்னையில் வாகனங்களுக்கான எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, எல்.பி.ஜி இறக்குமதி பெருமளவு குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகத் தமிழகம், குறிப்பாகச் சென்னையில் கடந்த சில நாட்களாக எரிவாயு தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எரிவாயு கையிருப்பு இல்லாததால் வடபழனி, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல எரிவாயு நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஒரு சில பங்க்-குகளில் எரிவாயு நிரப்ப ஓட்டுநர்கள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு பங்க்-கில் கேஸ் நிரப்ப சுமார் 3 கி.மீ தூரத்திற்கு ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றன. கீழ்ப்பாக்கம், பெரம்பூர் பகுதிகளிலும் இதே போன்ற நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி முறைக்கு மாற்றியுள்ளனர்.
"ஒரு கிலோ எல்.பி.ஜி காஸில் ஆட்டோ 20 கி.மீ வரை ஓடும், ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோலில் 8 கி.மீ மட்டுமே செல்ல முடியும். கேஸ் நிரப்பவே ஒரு நாளின் பாதி நேரம் செலவாவதால், எங்களால் சவாரி செல்ல முடிவதில்லை. அன்றாட வருமானம் இன்றி குடும்பத்தை நடத்தவே சிரமப்படுகிறோம்," என ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுபவர்கள், கேஸ் நிரப்பக் காத்திருக்கும் நேரத்திலும் ஆட்டோ உரிமையாளருக்கு வாடகை செலுத்த வேண்டியிருப்பதால் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த எரிவாயு பற்றாக்குறையைச் சமாளிக்க மாற்று வழிகள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. எல்.பி.ஜி தட்டுப்பாட்டை நீக்கி, தடையின்றி எரிவாயு கிடைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.