ஆட்டோ மினிமம் கட்டணம் ரூ.50 ஆக உயர்வு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

 

தமிழ்நாட்டில் சென்னை பெருநகரப் பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் இயங்கும் ஒப்பந்தக் கேரேஜ் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்து, தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 67-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த புதிய கட்டண விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாகக் கடந்த 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட பழைய கட்டண அரசாணைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இந்தப் புதிய மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

முதல் 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கான குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முன்பு இது ரூ.25 ஆக இருந்தது). 1.8 கி.மீ-க்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் தலா ரூ.25 வசூலிக்கப்படும்.

மலைப் பிரதேசங்கள் மற்றும் சரிவான பாதைகளில் பயணிக்கும் ஆட்டோக்களுக்குக் குறைந்தபட்சக் கட்டணமாக முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.60 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிந்தைய கூடுதல் கிலோமீட்டர்களுக்குத் தலா ரூ.30 கட்டணமாக வசூலிக்க அரசு அனுமதித்துள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான பயணங்களுக்கு, சாதாரண நேரக் கட்டணத்தை விட 1.5 மடங்கு (50% கூடுதல்) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஆட்டோவை நிப்பாட்டி வைக்கும் காத்திருப்பு நேரத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.1 வீதம் கணக்கிடப்படும்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் காரணம் காட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் விடுத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பயணிகள் நலனையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்தக் கட்டண மாற்றங்களை முறைப்படுத்தியுள்ளது.