மதுபாட்டிலை தரல... தாய்மாமனை ஆட்டோவில் வைத்தே அடித்து கொலை செய்த இளைஞர்!
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த 46 வயது ஆட்டோ ஓட்டுநர் முருகன், கடந்த 21-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் தனது ஆட்டோவில் அமர்ந்து தனியாக மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த அவரது அக்காவின் மகனான 32 வயது கூலித் தொழிலாளி பவித்ரன், மதுபோதையில் தனது தாய் மாமாவான முருகனைப் பார்க்க அங்கே வந்துள்ளார். ஆட்டோவில் மாமா மது அருந்துவதைக் கண்ட பவித்ரன், தனக்கும் குடிக்கச் சரக்கு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் முருகன் தன்னிடம் மது குறைவாக இருப்பதாகக் கூறி சரக்கு தர மறுத்ததால், இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் வெடித்துள்ளது.
இந்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த பவித்ரன், தனது தாய் மாமா முருகனைச் சரமாரியாக அடித்து உதைத்துத் தாக்கியுள்ளார். இதில் முருகன் பலத்த காயமடைந்து மயங்கி விழவே, போலிசாருக்குப் பயந்த பவித்ரன் அவரை ஆட்டோவில் படுக்க வைத்துத் தனது தாயிடம் கொண்டு சென்று மாமாவை யாரோ மர்ம நபர்கள் தாக்கிவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். உடனடியாக முருகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து முருகனின் அக்கா மாலா அளித்த புகாரின் பேரில், பேசின் பிரிட்ஜ் காவல் நிலையப் போலிசார் விபரம் சேகரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த கேமரா பதிவுகளில் பவித்ரன் ஆட்டோவில் வைத்து முருகனைக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சிக்கியதை அடுத்து, அவரிடம் போலிசார் தங்களது கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடங்கினர். குற்றத்தை ஒப்புக்கொண்ட பவித்ரனைப் போலிசார் கொலை வழக்கின் கீழ் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.