ஏடிஎம் மூலம் ரேஷன் அரிசி - 'அன்னபூர்த்தி' தானியங்கி திட்டம் அறிமுகம்!

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் பயனாளிகள் எந்த நேரத்திலும் தங்களுக்குரிய அரிசியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் 'அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்' எனும் தானியங்கித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இப்புதிய திட்டம் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் உள்ள பிரகான் என்ற பகுதியில் முதன்முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ரேஷன் கடைகளின் வேலை நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, 24 மணி நேரமும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயனாளிகள் தங்களது ரேஷன் அட்டை விவரங்களை இயந்திரத்தில் உள்ளீடு செய்து, கைரேகைப் பதிவை பூர்த்தி செய்ய வேண்டும். சரிபார்ப்பிற்குப் பின் அவற்றுக்கான அரிசி தானியங்கி முறையில் வெளியேறும். இந்த தானியங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 2,500 கிலோ அரிசியைச் சேமித்து வைக்கும் திறன் உள்ளது.

இப்புதிய தொழில்நுட்பச் சேவையை உள்ளூரில் செயல்பட்டு வரும் 'ஜோதி' என்ற மகளிர் சுயஉதவிக் குழு சிறப்பாக இயக்கிப் பராமரித்து வருகிறது. இத்திட்டம் மூலம் ரேஷன் விநியோகத்தில் தாமதம் தவிர்க்கப்படுவதோடு, முறைகேடுகளும் பெருமளவில் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.