தமிழக கோயில்களில் தானியங்கி 3 சக்கர வாகனங்கள்... மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் விரைவில் ஏற்பாடு - அமைச்சர் ரமேஷ் தகவல்!
தமிழகத்திலுள்ள கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் தானியங்கி மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட சிறப்புக் கட்டமைப்புகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் கோயில்களுக்கு வந்து செல்வதை எளிதாக்கும் வகையில், தானியங்கி மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (வளைதளம்) பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.
அனைத்து பக்தர்களைப் போலவே மாற்றுத்திறனாளிகளும் எந்தவிதமான தடையுமின்றி, பாதுகாப்பாகவும் முழு மரியாதையுடனும் இறைவனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதே அரசின் முதன்மையான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இலக்கை எட்டும் பொருட்டு, கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடி முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.