பட்டாசு தீப்பொறி பட்டு இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது! ஆவடியில் பரபரப்பு
தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசிலிருந்து வெளியான தீப்பொறி பட்டு, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி பேருந்து நிலையம் அருகே தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பட்டாசிலிருந்து வெளியான தீப்பொறி, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ மளமளவெனப் பரவி வாகனம் முழுவதும் எரிந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகத் தண்ணீரை ஊற்றி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. பட்டாசு வெடிக்கும்போது அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கும் தீப்பொறி பரவாமல் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.