பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவு... பிராட் பீக் சிகரத்தில் 6 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பலுசிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடரின் பிராட் பீக் சிகரத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி சர்வதேச மலையேற்ற வீரர்கள் பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். உலகின் 12-வது மிகயுயர்ந்த சிகரமான இதன் உயரம் 8,051 மீட்டராகும்.
சுமார் 7,000 மீட்டர் உயரத்தில் உள்ள முகாமை நோக்கி 10 முதல் 11 பேர் அடங்கிய பன்னாட்டு மலையேற்றக் குழுவினர் முன்னேறிச் சென்றபோது, திடீரெனப் பனிச்சரிவு ஏற்பட்டு சுமார் 1,000 மீட்டர் தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இதுவரை 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஓமன் நாட்டைச் சேர்ந்த நதீரா, நேபாளத்தைச் சேர்ந்த பூர் பகதூர் குருங் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மல்லோரி கெய்ஸ் உள்ளிட்டோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்குழுவில் புகழ்பெற்ற சர்வதேச நேபாள மலையேற்ற வீரரும், நெட்ஃபிலிக்ஸின் '14 Peaks' ஆவணப்படப் புகழுக்குரியவருமான நிர்மல் பூர்ஜா இடம்பெற்றிருந்தார்.
அவரது ஜி.பி.எஸ் கருவியின் இருப்பிடம் பனிச்சரிவுக்குப் பிறகு மாறியிருப்பதைக் காட்டியுள்ளதால், மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மற்றும் தரைப்படை மூலமாகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மோசமான வானிலை மற்றும் பனிப்புயல் காரணமாக அப்பகுதியில் மீட்புப் பணிகள் கடும் சவாலாக உருவெடுத்துள்ளன