சென்னையில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... கொத்துகொத்தாக உயிரிழந்த பறவைகள்... கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!
சென்னையின் முக்கியப் பொழுதுபோக்கு இடமான கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூங்கா காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகளிடையே H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி பூங்கா நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகப் பூங்காவில் உள்ள பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இதுவரை 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, கரண்டிவாயன் (Spoonbill), கூழைக்கடா (Pelican), செங்கால் நாரை (Painted Stork) மற்றும் பல்வேறு வகை கொக்குகள் பலியாகியுள்ளன.
உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள 'உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு' (NIHSAD) அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில், பறவைகளுக்குத் தீவிரமான பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை கிண்டி சிறுவர் பூங்காவிற்குப் பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்குத் தொற்று பரவாமல் தடுக்க வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பூங்கா முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஊழியர்கள் அனைவரும் முழுப் பாதுகாப்பு உடையுடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் , பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இறந்த பறவைகளையோ அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளையோ கைகளால் தொடக்கூடாது. உங்கள் வீட்டின் அருகே பறவைகள் மர்மமான முறையில் இறந்தால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கவும். கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து உண்ணவும்.