undefined

அய்யா வைகுண்டர் அவதரித்த தினம்... மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகப் பாடுபட்ட அய்யா வைகுண்டரின் 194-வது அவதாரத் திருநாள் வரும் மார்ச் 4-ம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்தச் சிறப்புத் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 4-ம் தேதி பொதுத்தேர்வுகள் அல்லது ஏதேனும் முக்கியத் தேர்வுகள் இருந்தால், அந்தத் தேர்வுகள் தடையின்றி நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

இந்த விடுமுறை செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14-ம் தேதி (சனிக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள தலைமைப் பதியில் இந்த விழா மிக விமர்சையாகக் கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாகச் சாமிதோப்பிற்குச் செல்வது வழக்கம். அய்யா வைகுண்டரின் போதனைகளை நினைவுகூரும் வகையில், பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் வாகன பவனிகளும் நடைபெற உள்ளன.