நடுரோட்டில் விடப்பட்ட பச்சிளம் குழந்தை - காரில் வந்து குழந்தையை வீசிச் சென்ற அவலம்!

 

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. காரில் வந்த மர்ம நபர்கள் குழந்தையை விட்டுச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இன்று மதியம், இந்த ஆலயத்தின் எதிரே உள்ள சாலையில் ஒரு துணிப் பொதி கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ உதவியாளர்கள், குழந்தையை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் அந்தக் குழந்தை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். தற்போதைய தகவலின்படி, அந்த ஆண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி, ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் குழந்தையை அங்கே விட்டுவிட்டு வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகச் சுவாமிமலை காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை விட்டுச் சென்ற கார் மற்றும் நபர்களைத் தேடி வருகின்றனர். சமீபத்தில் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.