கழிவுநீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை ... வைரல் வீடியோ!
கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருகே பழைய கட்டிடத்தின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் 7 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர். ஆறு வயது மதிக்கத்தக்க இந்த குட்டி யானை தொட்டிக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து வந்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி பகுதியில் அமைந்திருந்த ஒரு பழைய கட்டிடத்தின் கழிவுநீர் தொட்டியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வழிமாறி வந்த குட்டி யானை எதிர்பாராதவிதமாக இந்த ஆழமான தொட்டிக்குள் விழுந்துள்ளது. தொட்டிக்குள் தவித்து வந்த குட்டி யானையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், குட்டி யானையை மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர். பொதுமக்கள் மற்றும் மீட்புக்குழுவினரின் கூட்டு முயற்சியால் சுமார் 7 மணி நேரம் போராடி குட்டி யானை பத்திரமாக மீட்டுக் காப்பாற்றப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யானை மீட்கப்பட்டதை அனைவரும் நிம்மதி பெருமூச்சுடன் வரவேற்றனர்.