7 வயசில 255 பவுண்ட் ... அதீத எடையால் சிறுவன் பலி... பெரும் சோகம்!
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பிளின்ட் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டேமியன் மற்றும் ஜெசிகா ஓ பிரையன். இந்தத் தம்பதியருக்குக் காஸ்பர் ஓ பிரையன் என்ற 7 வயது மகன் இருந்தான். இந்தச் சிறுவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் மூச்சுவிட சிரமப்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்தச் சிறுவன் இருநூற்று ஐம்பத்தியந்து பவுண்ட் எடையுடன் இருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகப்படியான உடல் பருமன் மற்றும் இதய நோய் காரணமாகவே அந்தச் சிறுவன் உயிரிழந்தான் என்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்தது. இது குறித்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பெற்றோர் அந்தச் சிறுவனுக்குச் சத்தான உணவுகளை வழங்காமல் சிப்ஸ் மற்றும் வறுத்த உணவுகளை மட்டுமே தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவனைக் கடந்த ஓராண்டிற்கும் மேலாக எந்தவொரு மருத்துவரிடமும் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்காமல் வீட்டில் படுக்கையிலேயே அடைத்து வைத்துப் பெற்றோர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அவர்களின் வீடு முழுவதும் குப்பைகள் குவிந்து மிகவும் மோசமான சுகாதாரமற்ற சூழலில் காணப்பட்டதோடு, அவர்களது 5 வயது பெண் குழந்தையும் முறையான பராமரிப்பின்றிப் பசியால் வாடியது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் இறப்பிற்குப் பெற்றோரின் கடுமையான அலட்சியமும், சித்திரவதையுமே காரணம் என்று அரசு வழக்கறிஞர் டேவிட் லேடன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து சிறுவனின் மரணத்திற்கு காரணமான தந்தை டேமியன் மற்றும் தாய் ஜெசிகா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.