உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் உன்னதி ஹூடா; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ட்ரீசா - காயத்ரி ஜோடி!

 

புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, மியான்மர் நாட்டின் தெட் தார் துசாரை எதிர்கொண்டார். 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 22-20, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று உன்னதி ஹூடா 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார். 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள கனடாவின் மிட்செலி லீயுடன் உன்னதி ஹூடா மோதவுள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, போட்டித் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் லாரன் லாம் - அலிசன் குயின் லீ ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் கவிப்பிரியா செல்வம் - சிம்ரன் சிங்கி ஜோடி 7-21, 14-21 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் கேப்ரியலா ஸ்டோவா - ஸ்டெஃபானி ஸ்டோவா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர் - ருத்விகா ஷிவானி காடே ஜோடி 22-20, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் கனடாவின் ஜோனாதன் பிங் சான் லாய் - கிரிஸ்டல் லாய் ஜோடியிடம் போராடித் தோற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அஷித் சூர்யா - அம்ருதா பிரமுதேஷ் ஜோடி 21-16, 29-30, 22-24 என்ற செட் கணக்கில் துருக்கியின் எம்ரே சோன்மேஸ் - யாஸ்மென் பெக்டாஸ் ஜோடியிடம் தீவிரமாகப் போராடித் தோல்வியடைந்தது.