காஸ் கட்டர் மூலம் நகைக்கடை ஷட்டரை வெட்டி கொள்ளை... ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி அபேஸ்!

 

 

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை அருகே, நள்ளிரவில் நகைக்கடையின் ஷட்டர் மற்றும் பூட்டுகளை காஸ் கட்டர் இயந்திரம் மூலம் வெட்டி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

allowfullscreen

நவநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திகம்பர் என்பவருக்குச் சொந்தமான ஓம் ஜூவல்லர்ஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள், கடையின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு காஸ் கட்டர் இயந்திரம் மூலம் ஷட்டர் மற்றும் பூட்டுகளை வெட்டி உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர் கடையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களைப் பைகளில் அள்ளிக்கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். மறுநாள் காலை கடைக்கு வந்த உரிமையாளர், கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த இருவர் கொள்ளையில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது