வீட்டில் 3 நாட்களில் 30 பாம்புகள், 100க்கும் மேற்பட்ட முட்டைகள்... தோண்ட தோண்ட அதிர்ச்சி!
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கஹர்கா கிராமத்தில், பழைய வீட்டின் தரைப்பகுதியைத் தோண்டியபோது ஏராளமான பாம்புகள் மற்றும் அவற்றின் முட்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கபில் தியாகி என்பவருக்குச் சொந்தமான சுமார் 35 ஆண்டுகள் பழமையான வீட்டை இடித்துப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது வீட்டின் அடிப்பகுதியில் இருந்து தொடர்ந்து பாம்புகள் வெளியேறியுள்ளன. கடந்த சில நாட்களில் சுமார் 30 பாம்புகள் பிடிக்கப்பட்டதாகவும், அவை பாதுகாப்பாக வெளியே விடப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பாம்புகள் வந்ததால் தரைப்பகுதியைத் தோண்டிப் பார்த்தபோது, 100-க்கும் மேற்பட்ட பாம்பு முட்டை ஓடுகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டின் கீழே பாம்புகள் இனப்பெருக்கம் செய்திருக்கலாம் எனக் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் வீட்டைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாம்புகள் தென்படவில்லை என்றும், முட்டை ஓடுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டின் கீழே பாம்புகள் தங்கியிருக்கும் இடம் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தினர் வீட்டைக் காலி செய்து வேறு இடத்தில் தங்கியுள்ளனர்.