பகீர்... 100 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை - ஆற்றோரம் புதைக்கப்பட்ட அவலம்.. தேர்தல் வாக்குறுதியால் விபரீதம்!

 

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் சுமார் 100 தெருநாய்கள் விஷ ஊசி மூலம் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

மஞ்சேரியல் மாவட்டம் கிஷ்தாப்பூர் கிராமத்தில் கடந்த மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் சுற்றித் திரிந்த சுமார் 100 நாய்களைப் பிடித்து, அவற்றுக்கு கொடிய விஷ ஊசிகளைச் செலுத்தி மர்ம நபர்கள் கொன்றுள்ளனர். பின்னர், உயிரிழந்த நாய்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள ஆற்றோரம் குழி தோண்டிப் புதைத்துள்ளனர். விலங்கு நல ஆர்வலரான கௌதம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அந்த கிராமத்தின் சர்பஞ்ச் (ஊராட்சித் தலைவர்) மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆகியோர் இணைந்து, தெருநாய்களைக் கொல்ல இரண்டு நபர்களை வாடகைக்கு அமர்த்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலின் போது, கிராமத்தை "நாய்கள் இல்லாத ஊராக மாற்றுவோம்" என சில வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்ததாகவும், அந்த 'தேர்தல் வாக்குறுதியை' நிறைவேற்றவே இந்த கொடூரச் செயல் அரங்கேறியுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

தெலங்கானாவில் இது முதல் முறையல்ல. கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை ஹனம்கொண்டா, காமரெட்டி மற்றும் ஜகித்யால் ஆகிய மாவட்டங்களில் இதேபோல் ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. இதுவரை மாநிலம் முழுவதும் கொல்லப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விலங்கு நல ஆர்வலர்கள் மாநில டிஜிபி-யிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, ஜன்னாரம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழந்த நாய்களின் உடல்களைத் தோண்டி எடுத்து இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

தெருநாய்களை இவ்வாறு சட்டவிரோதமாகக் கொல்வது "நிர்வாகத் தோல்வி" என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் மீண்டும் அரங்கேறும் இத்தகைய சம்பவங்கள் மனிதநேயமற்றச் செயலாகப் பார்க்கப்படுகிறது.