பகீர்... ஊட்டி மலைப்பாதையில் ஓடும் அரசுப் பேருந்தில் கழன்று ஓடிய முன்பக்க டயர் - அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த 39 பயணிகள்!

 

கன்னியாகுமரியில் இருந்து 39 பயணிகளுடன் ஊட்டி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று ஓடிய விபத்தில், பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

கன்னியாகுமரியில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 39 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. அந்தப் பேருந்து குன்னூர் அருகே பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அதன் முன்பக்க டயர் கழன்று ஓடியது.

டயர் கழன்றதால் நிலைதடுமாறிய பேருந்தை, ஓட்டுநர் உடனடியாகச் சுதாரித்துப் பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். இதனால் பேருந்து சாலையில் நீண்ட தூரம் உரசி நின்ற நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திடீர் விபத்தினால் அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் அவர்கள் அனைவரும் மாற்றுப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். டயர் இல்லாமல் பழுதாகி நின்ற பேருந்து சாலையில் அப்படியே நிறுத்தப்பட்டது.

சினிமாவில் வருவது போன்ற இத்தகைய விபத்து தங்களுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்த பயணிகள், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அரசுப் பேருந்துகளை முறையாகப் பராமரித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.